×

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு: 2.19 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்

சென்னை: தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.238 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. கலைஞர் ஆட்சியில் 2009ல் இந்த திட்டம் முதன் முதலாக கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரொக்க பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்குகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2024ம் ஆண்டு, தமிழர் திருநாளான தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் ரூ.238 கோடியே 92 லட்சத்து, 72 ஆயிரத்து, 741 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது.

அதன்படி, பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட உள்ள பச்சரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்காக கொள்முதல் செய்யும் நிறுவனமான தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வெளிச்சந்தை விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.35.20 வீதம் கொள்முதல் செய்யப்பட்டு, நியாய விலை கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும். அதேபோன்று, சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ.40.61 என்ற வீதத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

2,19,57,402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு முழு கரும்பு கொள்முதல் செய்து வழங்கப்படும். ஒரு முழு கரும்பு தோராயமாக ரூ.33-க்கு கொள்முதல் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர், மண்டல மேலாளர் ஆகியோரை உள்ளடக்கிய குழு அமைத்து அந்தந்த மாவட்ட அளவில் முழு கரும்பினை கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் வழங்க கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு உரிய நிதியினை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுக்கு ஆகும் மொத்த செலவின தொகை 239 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய்க்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* பச்சரிசி கிலோ ஒன்றுக்கு ரூ.35.20 வீதம் கொள்முதல் செய்யப்பபடும்.
* சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ.40.61 என்ற வீதத்தில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.
* ஒரு முழு கரும்பு தோராயமாக ரூ.33-க்கு கொள்முதல் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு: 2.19 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்